சைபர்ஜெயா, 24 செப்டம்பர் (பெர்னாமா) -- துன் டாக்டர் மகாதீர் முஹாமட்டின் சொத்துகள் தொடர்பில் இங்கிலாந்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, தற்போது சுவிட்சர்லாந்து வரையில் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் உறுதிப்படுத்தியது.
கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக தமது தரப்பு தற்போது இரு நாடுகளின் அமலாக்கத் தரப்பினரிடம் இணைந்து பணியாற்றி வருவதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
"நாங்கள் இன்னும் இங்கிலாந்தில் உள்ள அமலாக்கத் தரப்புடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறோம். அனைத்துலக ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு மையம் (IACCC) உட்பட சொத்துக்கள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் உதவுகிறார்கள். ஆனால், இதுவரை எந்த அண்மைய நிலவரமும் இல்லை", என்றார் அவர்.
இன்று, Multimedia பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு நெறிமுறை மற்றும் தலைமைத்துவ தினத்தில் கலந்துக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.
லண்டனை தளமாகக் கொண்ட தேசிய குற்றவியல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு பிரிவான IACCC எனப்படும் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு மையம், ஊழல் விசாரணைகள் தொடர்பான அனைத்துலக தகவல்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
சொத்து அறிவிப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும் நபர்களில் டாக்டர் மகாதீரும் ஒருவர் ஆவார் என்று கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அசாம் பாக்கி அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)