சென்னை, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- பலகுரல் கலைஞராக தமது கலையுலக பயணத்தைத் தொடங்கி, பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.
சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி தமது 46-வது வயதில் இயற்கை எய்தினார்.
ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர், சில காலங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார்.
இதையடுத்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் மீண்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ போன்று தத்ரூபமாக நடித்து அசத்தியதால் அவரின் பெயருக்கு முன்னால் 'ரோபா' என்ற அடைமொழி சேர்த்து கொள்ளப்பட்டது.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், ஊர் திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பலகுரலில் பேசி, மக்களை மகிழ்விப்பதில் வித்தகரானார்.
சின்னத்திரையில் பெற்ற பெயரும், புகழும் அவருக்கு வெள்ளித்திரையின் கதவுகளை திறந்துவிட்டதில், விசுவாசம், புலி, மாரி, 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வேலைக்காரன், என பல படங்களில் நடித்து தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் தமக்கென ஓர் தனி இடம் பிடித்தார்.
இவரது மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரை நடிகையாக இருக்கும் நிலையில், மகள் இந்திரஜா, 'பிகில்' படத்தில் விஜயுடன் நடித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், ரோபோ சங்கருக்கு திரைப் பிரபலங்கள் இறுதி மரியாதை செலுத்தி வரும் வேளையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்கு இறுதிவரை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனது.
இந்நிலையில், கமல்ஹாசன் அவருக்கு தனது சமூக வலைதளத்தின் மூலம் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)