கிள்ளான், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டு 'தமிழ் விழா' நேற்று சிறப்பாக நடந்தேறியது.
மொழி, கலை, கலாச்சாரம் ஆகிய பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்திய தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி மாணவர்களுக்கான பட்டிமன்ற போட்டி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் இந்த தமிழ் விழாவை ஏற்பாடு செய்து வருகின்றது.
சிலாங்கூர் மாநில அளவில் 42 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டுரை எழுதுதல், வர்ணம் தீட்டுதல், மூன்று மொழிகளில் பேச்சுப் பேட்டி, கவிதை ஒப்புவித்தல் உட்பட 11 போட்டிகள் நடத்தப்பட்டன.
அதே போன்று, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெற்ற நிலையில், புதிர்போட்டி முக்கிய அங்கம் வகித்தது.
இப்போட்டிகள் அனைத்தும் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக நடைபெற்றதாக 36-வது தமிழ் விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிரசாத் கிருஷ்ணன் தெரிவித்தார்.
''இந்த ஆண்டு விழாவில் முதல் முறையாக உயர்கல்வி மாணவர்களுக்காக பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னதாக, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குதான் நடத்தப்பட்டது. இதை ஒரு புதிய முயற்சியாக எடுத்தோம். இன்றைய நிறைவு விழாவில் அதன் இறுதிச் சுற்றும் நடைபெற்றது,'' என்றார் அவர்.
மேலும், பரதநாட்டிய போட்டியும் அதற்காக வழங்கப்படும் சுழற்கிண்ணமும் முக்கிய அங்கம் வகிப்பதாக கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் துணைத் தலைவருமான பிரசாத் கூறினார்.
இதனிடையே, போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது அனுபவங்களை பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
உயர்கல்வி மாணவர்களுக்கான பட்டிமன்ற போட்டியில் வட மலேசிய பல்கலைக்கழகமான UUM சுழற்கிண்ணத்தை தட்டிச் சென்றது.
இதர போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஆரம்பப் பள்ளி நிலைகளில் கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியும், இடைநிலைப்பள்ளி அளவில் கிள்ளான் RAJA MAHADI இடைநிலைப்பள்ளியும் வாகை சூடின.
இந்திய சமுதாயத்திற்காக சேவையாற்றிய கே. தம்புசாமி பிள்ளையை நினைவுக்கூர்ந்து, அவரைப் போன்று சேவையாற்றிய எழுவர் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.
சிலாங்கூர், கிள்ளானில் இரவு மணி 7.30 அளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர் உட்பட சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)