எல்லா, 09 செப்டம்பர் (பெர்னாமா) -- மத்திய இலங்கையில், மலைப் பாதையில், 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 18 பேர் காயமடைந்தனர்.
தெற்கு கடற்கரை நகரமான தங்கல்லேயில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமான எல்லாவுக்கு நகராட்சி தொழிலாளர்களுடன் சுற்றுலா மேற்கொண்டு, திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
விபத்திற்கு முன்னதாக, அப்பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்துவிட்டதாக அதன் ஓட்டுநர் கூறியதாக உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்தார்.
அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் கிட்டத்தட்ட 200 ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)