Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மின்சார வாகனத்திற்கான தொழிற்சாலை தொடக்கம்; மலேசியா - சீனாவின் அணுக்கமான ஒத்துழைப்பு பிரதிபலிப்பு

04/09/2025 05:44 PM

தஞ்சோங் மாலிம், 04 செப்டம்பர் (பெர்னாமா) --   நாட்டின் புரோட்டோன் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் EV-க்கான தொழிற்சாலை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, புரோட்டான் மற்றும் அதன் வியூக பங்காளியான கீலி மூலம் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அணுக்கமான ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது.

அவற்றுடன், நாட்டின் வாகனத் துறையும் இதன் மூலமாக வளர்ச்சி அடைவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது முதலீட்டை உட்படுத்திய ஒத்துழைப்பாக மட்டுமின்றி தொழில்நுட்ப பரிமாற்றத்தில் அர்ப்பணிப்பையும், எதிர்கால வாகன தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்தையும் பெறுவதற்கான முயற்சி என்றும் அவர் விவரித்த்தார்.

உள்நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்பும் இதில் அடங்குவதாக குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ அன்வார், மலேசியாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்த சீன அரசாங்கத்தையும் நன்றி பாராட்டினார்.

''இத்துறையில் ஒத்துழைப்பதன் மூலம் அவர்கள் பலன்களைப் பெறுவது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தொழில்நுட்பத்தை மாற்றவும், உள்நாட்டில் முதலீடு செய்து தங்கள் சொந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய இடம் அளிக்கவும் அவர்கள் தயாராக இருப்பதால் இது சாத்தியமாகிறது'', என்றார் அவர்.

இதனிடையே, புரோட்டான் EV தொழிற்சாலையின் மேம்பாடு, எரிசக்தி மாற்றம், தொழில்துறை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வாகனக் கொள்கை என்.ஏ.பி உள்ளிட்ட அனைத்தும் நாட்டின் சில முக்கிய கொள்கைக்கு ஏற்ப இணங்குவதாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பேராக் தஞ்சோங் மாலிமில் இன்று நடைபெற்ற புரோட்டான் EV தொழிற்சாலை தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)