பெய்ஜிங், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- இரண்டாம் உலகப் போரின் 80-ஆம் ஆண்டு நிறைவை நினைவுக்கூறும் வகையில் இன்று பெய்ஜிங்கின், தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பங்கேற்றார்.
காலை மணி 8.30-க்கு சதுக்கத்திற்கு வருகைப் புரிந்த பிரதமர் அன்வார் மற்றும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவரின் துணைவியார் பெங் லியுவானும் வரவேற்றனர்.
பெரிய அளவிலான அந்த இராணுவ அணிவகுப்பில் மொத்தம் 26 வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூட் பெஷேஷ்கியன், கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனி, மங்கோலிய அதிபர் உக்னா குரேல்சுக், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, மியான்மார் இடைக்கால அதிபர் மின் ஆங் ஹ்லைங் ஆகியோரும் அடங்குவர்.
சீன ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிய இந்த நினைவுக்கூறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பைக் கண்காணித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி, பின்னர் உரையாற்றினார்.
10,000-கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் போர்க்கால கட்டளை அமைப்பு உருவாக்கத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தரைப்படை உபகரணங்களும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)