சிப்பாங், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- உலகப் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் சென் தாங் ஜீ-தோ ஈ வேய் தங்கம் வென்றதும், மகளிர் இரட்டையர் பிரிவில் பெர்லி தான்-எம் தினா வெள்ளி வென்றதும் ரோட் டு கோல்ட், ஆர்.டி.ஜி திட்டத்தின் சிறந்த அடைவுநிலைக்கான சான்றாகும்.
அரசாங்க ஒதுக்கீடுகள் வீண் விரயம் அல்ல, மாறாக அவை தேசிய விளையாட்டு துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் சிறந்த அடைவுநிலையாக பிரதிபலிப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
''நிச்சயமாக, ரோட் டு கோல்ட் திட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் ஒவ்வொரு விளையாட்டாளரும் நாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். இது நாட்டிற்கான முதலீடு. எனவே, அவர்கள் கையெழுத்திட்ட உறுதிப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். நான்கு மாதங்களில் அதற்கான வெற்றியை நாம் கண்டுள்ளோம்,'' என்றார் அவர்.
விளையாட்டு வெற்றி பரிசுத் திட்டம், ஷகாம்-இன் கீழ் தங்கம் வென்றவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும் வெள்ளி வென்றவர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று ஹன்னா மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் பாரிசில் நடைபெற்ற உலக பூப்பந்து போட்டியில் தாங் ஜீ-ஈ வேய் மற்றும் பெர்லி-தினா ஜோடிகள் மலேசியாவிற்காக பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)