புத்ராஜெயா, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பிரபலமானவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பரிந்துரையை சட்டத்தின் அடிப்படையில் ஆராய வேண்டும்.
இதுவரை, நீதிமன்றம் நேரடி ஒளிபரப்புகளை அனுமதிக்காமல், குரல் பதிவுகளுக்கு மட்டுமே அனுமதித்துள்ளதாக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
அதற்காக நீதிமன்ற அனுமதி தேவை என்றும், இதை அமல்படுத்த வேண்டுமானால் தேசிய தலைமை நீதிபதியுடனும் இவ்விவகாரம் கலந்துரையாடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
”சட்ட நெறிமுறை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் வழக்கு விசாரணைகளை ஒளிபரப்புவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை. முதலில் நடைமுறைகளை நான் சரிபார்க்க வேண்டும்.. எனக்கு இன்னும் தெரியாது. ஆனால், பொதுவாக அது பதிவு. இது ஒரு பதிவு என்றால், பெரும்பாலான வழக்குகளில் குரல் பதிவு உள்ளது. ஆனால், இதைப் பொறுத்தவரை நான் முதலில் சரிபார்க்க வேண்டும். ஆனால், அது உண்மையில் தீவிரமானதா என்று நாம் விவாதிக்க வேண்டும். அதை தேசிய தலைமை நீதிபதியுடன் கலந்துரையாட வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, புதன்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டம் மற்றும் ஜாலூர் ஜெமிலாங்கைப் பறக்க விடும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அசாலினா இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)