Ad Banner
Ad Banner
 பொது

இந்தியாவின் 79ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சுவாராஜ்யா'  இசை விழா

24/08/2025 06:14 PM

பிரிக்பீல்ட்ஸ், 24 ஆகஸ்ட் (பெர்னாமா) - இந்தியாவின் சுதந்திர உணர்வை இசையோடும் நாட்டியத்தோடும் வெளிபடுத்தும் விதமாக மலேசிய இந்தியத் தூதரகம் நேற்று புதிய முயற்சியை முன்னெடுத்தது.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்தியாவின் 79ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. 

'சுவாராஜ்யா'  என்ற தலைப்பில், PR EVENTS  மற்றும் ஆக்கார் அறவாரியத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு தியாகங்களைக் கடந்து முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாட்டு மக்கள் குறிப்பாக இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கும் பிரஜைகளும் இளைஞர்களும் மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக,
இந்தியத் தூதரகம் முதல் முறையாக இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்ததாக மலேசியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் சுபாஷினி நாராயணன் கூறினார். 

"இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் அந்த காலகட்டத்தில் இயல், இசை நாடகம் மூலமாக காலனித்துவ ஆட்சியின் போது இருந்த உணர்வை மீண்டும் நினைவுகூரும் விதமாக இந்த கலைவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை மூலமாகவும், கண்கவர் கலாச்சார நடனம் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்ட இந்த படைப்பு பார்த்தவர்களுக்கு புதுவித உணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார். 

மலேசியாவில் ஆயிரக்கணக்கான இந்தியப் பிரஜைகள் வசித்து வருகிற நிலையில், இடவசதி கருதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்றாலும், தூதரகத்தின் அனைத்து சமூகவலைத்தளப் பக்கங்களிலும் இன்று முதல் இந்நிகழ்ச்சி முழுமையாக ஒளிபரப்பப்படும்  என்று கூறினார்.

இந்தியர்களையும் கலையையும் பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக மலேசிய இந்தியத் தூதரகம் முன்னெடுத்திருந்த இந்த மாறுபட்ட முயற்சிக்கு தமது பங்களிப்பும் மகிழ்ச்சி அளித்ததாக உள்நாட்டுப் பின்னணிப் பாடகி ப்ரீத்தா பிரசாத் தெரிவித்தார்.

"இதில் இந்திய நாட்டுக் கலைஞர்களும் உள்நாட்டுக் கலைஞர்களும் இணைந்து தங்களின் படைப்பை வழங்கினர். இந்தியாவின் சுதந்திர தினத்தை இப்படியும் உணர்த்த முடியும் என்பதை மெய்பித்துக் காட்டியுள்ள இந்தியத் தூதரக்கத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஆண்டுதோறும் இந்த முயற்சி தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்," என்று கருத்துரைத்தார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகமான சிறுவர்களும் இளைஞர்களும் கலைத்துறையில் குறிப்பாக ஆடல், பாடல் மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பது நாட்டின் கலைத்துறை வளர்ச்சி அடைவதை காட்டுவதாக, விழாவில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட பிரிக்பீல்ட்ஸ் நுண்கலை ஆலயத்தின் மூத்த இயக்குநர் வத்சலா சிவதாஸ் கூறினார். 

மாலை மணி நான்கு தொடங்கி மணி ஆறு வரை நடைபெற்ற இவ்விழாவில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)