கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பள்ளி மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றவும் இறக்கவும் செய்ததாக சந்தேகிக்கப்படும் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அது தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து, 59 வயது அவ்வாடவர் மீது 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 42(1)-இன் கீழ் குற்றம் பதிவானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரொன் அப்துல் யூசோப் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரிங்கிட்டிற்கு குறையாத, 15,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம் என்று நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஏசிபி நாஸ்ரொன் குறிப்பிட்டிருந்தார்.
பள்ளி வேன் ஒன்று நகரும் நிலையில் பள்ளி மாணவர்கள் இருவரை இறக்கிவிட்டு ஏற்றிச் செல்வது போன்ற 33 வினாடிகள் கொண்ட காணொளியை, நேற்று மாலை மணி 5.53-க்கு தங்கள் தரப்பு கண்டறிந்ததாக, நாஸ்ரொன் கூறினார்.
வேன் ஓட்டுநரின் அச்செயல் மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற சாலை பயனர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையம் அல்லது 017-3818422 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு புகாரளிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)