Ad Banner
Ad Banner
 பொது

பகடிவதை எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவதற்கான அவசியம் ஆராயப்படும்

19/08/2025 04:15 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) --   மாணவர்கள் மற்றும் சிறாரை உட்படுத்திய பகடிவதை சம்பவத்தை செவிமடுக்க, நடுவர் மன்றத்தை உருவாக்க வலியுறுத்தும் பகடிவதை எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவதற்கான அவசியத்தை அரசாங்கம் ஆராயவிருக்கிறது.

தற்போது எந்தவொரு சட்டத்திலும் பகடிவதை தொடர்பான தெளிவான அர்த்தமோ அல்லது தண்டனையோ இடம்பெறவில்லை என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

"சட்டத்தில் "பகடிவதை" என்ற வார்த்தை குறிப்பிட்டு இடம்பெறாததால், நியாயப்படி கூறினால், செக்‌ஷன் 507 BCD-இல் திருத்தம் மேற்கொண்டதில் நான் மிகவும் நிம்மதியடைந்தேன். கடைசிப் பகுதியை நாங்கள் செய்ய முடிந்தது. எனவே, திருத்தத்தை அனுமதித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திற்கும், குறிப்பாக மன்றத் தலைவர் மற்றும் பிரதமருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும், சபா மற்றும் சரவாக்கில் ஒரு சிறுவர் ஆணையரை அனுமதிக்கும் வகையில் சுஹாகாம் சட்டத்தை திருத்தியதில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இது மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், இங்கே முக்கிய அம்சம் என்னவென்றால், கல்வி அமைச்சு தங்கள் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது", என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஆசியான் சட்ட கருத்தரங்கு 2025-ஐ தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோஸ்ரீ அசாலினா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும், சிறுவர்கள் என்று சுஹாகாம் வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

எனவே, 2001ஆம் ஆண்டு சிறார் சட்டம் இன்னும் அவர்களுக்குப் பொருந்தும் என்றும் அசாலினா குறிப்பிட்டார்.

"எனவே, குழந்தைகள் பகடிவதை விவகாரத்தில் நாம் வேறு செயல்முறையைப் பார்க்க வேண்டுமா, நமக்கு நடுவர் மன்றம் தேவையா, மறுவாழ்வு அல்லது தண்டனைக்கு அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு சட்டத் தொகுப்பைப் பார்க்க வேண்டுமா போன்றவை குறித்து அமைச்சரவை விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்", என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)