Ad Banner
Ad Banner
 பொது

ஏ.டி.எம் அட்டைகளைப் உட்படுத்திய உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பல் கைது

18/08/2025 07:13 PM

கோலாலம்பூர், 18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆகஸ்ட் 8-ஆம் தேதி சுபாங் ஜெயாவில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், கடன் வாங்குபவர்களின், A-T-M பணப்பட்டுவாடா அட்டைகளைப் பயன்படுத்துவதாக நம்பப்படும் உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பலின் நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் அம்பலப்படுத்தியது.

இந்நடவடிக்கையில் 23 முதல் 36 வயதுக்கு உட்பட்ட ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடன் வாங்கியவர்கள் அப்பணத்தை திரும்ப செலுத்துவதற்காக அவர்களின் A-T-M அட்டையை சேகரிக்கும் நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட கும்பல் ஈடுபட்டு வந்ததாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் ஈசா தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த 2,924 ATM அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, 119,977 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர்.

சட்டவிரோதமான முறையில் கடனைத் திரும்பப் பெறும், சம்பந்தப்பட்ட கும்பலால் அப்பணம் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக டத்தோ ருஸ்டி கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட கும்பலின் நடவடிக்கைகளுக்கு தொடர்புடையதாக நம்பப்படும் பல்வேறு கடன் ஒப்பந்த ஆவணங்கள் அடங்கிய பச்சை நிற பை மற்றும் ஒரு பயணப் பெட்டியையும் போலீசார் கண்டெடுத்தனர்.

''விசாரணையில் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை மாத சம்பளமாக 2,500 முதல் 3,500 ரிங்கிட் வரை இக்கும்பல் பெற்று வந்தது தெரியவந்தது. பணம் எடுப்பதுதான் அவர்களின் முதன்மை நோக்கமாகும். சராசரியாக ஒரு நாளைக்கு 5,000 முதல் 8,000 வரை நாளொன்றுக்கு இரு முறை பணம் எடுப்பதும் அடங்கும். பின்னர் லாலாமூஃப் மூலம் அப்பணம் சம்பந்தப்பட்ட கும்பலால் டெலிகிராம் மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டது,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், அக்கும்பலின் செயல்முறை குறித்து கேள்வி எழுப்பும்போது அவர் அவ்வாறு கூறினார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 424 மற்றும் 1951-ஆம் ஆண்டு கடன் வழங்குபவர்கள் சட்டம் செக்‌ஷன் ஐந்து உட்பிரிவு இரண்டின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

அதேவேளையில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு 1953-ஆம் ஆண்டு திறந்தவெளி சூதாட்ட மையச் சட்டம் செக்‌ஷன் 4A(a)-இன் கீழ், குற்றப் பதிவு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)