கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இராணுவப் படையின் மூன்று அதிகாரிகள் மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவர் மீதான விசாரணையை நிறைவுச் செய்யும் பொருட்டு, தற்காப்பு அமைச்சிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கூடுதல் தகவல்களைப் பெறும்.
ரகசிய கோப்புகள் உள்ளிட்ட தகவல்கள், மலாக்கா மற்றும் ஜோகூரில் உள்ள மலாக்கா நீரினை பகுதியில் அதிகம் நிகழ்ந்ததாக நம்பப்படும் கடத்தல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
''விசாரணையை மேற்கொள்வதற்கான எங்கள் பணியை எளிதாக்கி எஸ்.பி.ஆர்.எம்-க்கு அனைத்து ஆதரவையும் வழங்கியதற்காக இராணுவப் படைத் தலைமைத் தளபதிக்கு நான் நன்றி கூறுகிறேன். நிச்சயமாக, சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறத் தற்காப்பு அமைச்சிற்குச் செல்வோம். மேலும் தற்காப்பு அமைச்சிலிருந்து சில ரகசிய கோப்புகளைப் பெறுவோம்'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடத்தல் நடவடிக்கைக்கு உடந்தையாக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் அரச மலேசிய இராணுவப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகள் மற்றும் இரு முன்னாள் அதிகாரிகள், Op Sohor சோதனை நடவடிக்கையின் வழி கைது செய்யப்பட்டதாக அசாம் பாக்கி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)