கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று அடையாளம் தெரியாத நபரால், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லியின் மகன் ஊசியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை தமது மனைவிக்கு மிரட்டல்கள் வந்ததை ரஃபிசி ரம்லி அம்பலப்படுத்தினார்.
நேற்று பின்னிரவு மணி 1.12 மற்றும் காலை மணி 11.02 அளவில், தனது மனைவிக்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அச்சுறுத்தல் கொண்ட அவ்விரு குறுஞ்செய்திகளும் ஒரே தொலைபேசி எண்ணிலிருந்து பெறப்பட்டதாக ரஃபிசி தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஃபிசி, தனது மகன் மீது தாக்குதல் மற்றும் மனைவிக்கு வந்த மிரட்டல்கள் அனைத்தும் தாம் விசாரித்துவரும் விவகாரங்களை அம்பலப்படுத்துவதை நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்ற சாத்தியத்தையும் மறுக்கவில்லை.
இதனிடையே தனது மகனின் அண்மைய நிலவரம் குறித்து விளக்கமளித்த அவர், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், யூ.பி.எம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தொடக்க பரிசோதனையில், முதல் 24 மணி நேரத்தில் எவ்வித பக்க விளைவுகளும் காட்டவில்லை என்றும் அது போதைப் பொருள் அல்லது விஷம் என்ற சாத்தியமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)