கோலாலம்பூர், 08 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று கெடா, அலோர் ஸ்டார், தாமான் குளோபில் ஒரு போலீஸ் அதிகாரியை மோதி மரணம் விளைவித்தாக சந்தேகிக்கப்படும் வாகனத்தில் இருந்த நால்வர், இன்று முதல் ஏழு நாள்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, இம்மாதம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை, அலோர் ஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்ற மஜிஸ்திரேட் , சித்தி நோர் அஸ்லிசா முஹ்மட் அலி பிறப்பித்தார்.
24 முதல் 26 வயதிற்கு உட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் காலை மணி 8.45 அளவில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காலை மணி 9.55 அளவில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
வியாழக்கிழமை தாமான் குளோப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடித்ததாக நம்பப்படும் நான்கு பேர் பயணித்த வாகனம் மோதியதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெடா போலீஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வு துறையில் பணிப்புரிந்து வந்த 35 வயதான காப்ரல் முஹ்மட் ஹஃபிசுல் இஷாம் மஸ்லான், அவரது உடலில் ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)