Ad Banner
Ad Banner
 பொது

தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பிரச்சனை தீர்வுக்கு மலேசியா தீவிரமாகப் பங்காற்றும்

07/08/2025 02:27 PM

புத்ராஜெயா , 07 ஆகஸ்ட் (பெர்னாமா) - தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மலேசியா தொடர்ந்து தீவிரமாகப் பங்காற்றும்.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதிகள் ஆகியோரை இன்று சந்தித்த பின்னர், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உறுதிப்பாட்டை வழங்கினார்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை புதியதல்ல என்றும், பல நூறு ஆண்டுகளாக இது நீடித்து வருவதாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இருப்பினும், அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் திறந்த மனதுடனான உரையாடல் மூலம் இதற்கு ஒரு தீர்வை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"குறைந்தபட்சம் இப்போதைக்கு, மலேசியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நிபந்தனைகளுக்கு இணங்க அவர்கள் உறுதியளித்துள்ளதுடன் ஆயுதங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்கிறார்கள். அதற்காக நாங்கள் தொடர்ந்து எங்களின் பங்களிப்பை ஆற்றுவோம். இன்று ஒன்று அல்லது இரண்டு சிறிய பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். நான் இரு தற்காப்பு அமைச்சர்களுடனும் இதைப் பற்றி விவாதித்தேன். ஆசியான் பாதுகாப்பு கூட்டமைப்பு பின்னர் இதைக் கண்காணிக்கும்," என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026 வரவு - செலவுத்திட்ட கலந்தாலோசிப்பு கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இரு நாடுகளும் தற்போதுள்ள நிபந்தனைகளுக்கு இணங்கவும் போர்நிறுத்தம் முழுமையாக மதிக்கப்படுவதை உறுதி செய்யவும் தமது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)