பேராக், 22 ஜூலை (பெர்னாமா) -- தாப்பாவிலிருந்து பீடோருக்கு செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் 328.9-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த இரு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் முதியவர்கள் மூவர் பலியான வேளையில், மேலும் மூவர் காயமடைந்தனர்.
இவ்விபத்து தொடர்பில், காலை மணி 11.19 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, தங்களின் பணியாளர்கள் எழுவர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின், பேராக் மாநில நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோசி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
77 வயது சோங் ஓங், 76 வயது தே கிம் காய் மற்றும் 70 வயதான டான் ஆஹ் தாக் ஆகியோர் விபத்தில் பலியானதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் சபரோசி தெரிவித்தார்.
தொயோதா வியோஸ் மற்றும் புரோட்டோன் X50 ரகத்திலான இரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
அதில், தொயோதா வியோஸ் காரில் பயணித்த ஆடவருக்கு காயம் ஏற்பட்டது.
புரோட்டோன் X50-யில் பயணித்த ஆடவர் ஐவரில் இருவர் உயிர் தப்பிய வேளையில், மூவர் உயிரிழந்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜொஹாரி யஹ்யா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)