சிப்பாங், 10 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மாதம் சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் கைராத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 19 வயது எம். ஶ்ரீ டார்வியன் மற்றும் டி. தினேஸ்வரி ஆகியோர் அதை புரிந்ததாக தலையசைத்தனர்.
கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை
கடந்த மாதம் ஜூன் 23-ஆம் தேதி சைபெர்ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இரவு மணி 9.11 தொடங்கி 11.31-க்குள் 20 வயது மனிஷாபிரிட் கோர் அக்காராவை வேலை இல்லாத ஆடவர் ஶ்ரீ டார்வியன் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை உட்பட 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் அவர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.
இதனிடையே, அதே தேதி மற்றும் இடத்தில் மதியம் மணி 12.30 அளவில் கொலை செய்யத் தூண்டியதாக அவ்வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த தினேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில் தடயவியல், பிரேத பரிசோதனை மற்றும் இராசயன அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]