கோலாலம்பூர், 05 ஜூலை (பெர்னாமா) -- PL எனப்படும் லாபுவான் கழகத்தின் புதிய தலைவராக, துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ பங்லீமா வில்பிரட் மேடியஸ் தங்காவ் நியமிக்கப்பட்டிருப்பதாக, வெளிவரும் வதந்திகளைக் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தாபா மறுத்துள்ளார்.
இதுவரை எந்த நியமனமும் செய்யப்படவில்லை என்றும், அந்த அதிகாரத் தரப்பின் தலைமைப் பதவிகளை நிரப்புவதற்கு சில தகுதி வாய்ந்த வேட்பாளர்களைக் கூட்டரசு பிரதேச துறையின் மூலம் மத்திய அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
வெளிவரும் வதந்திகளும் ஊகங்களும் உண்மைக்குப் புறம்பானது என்றும், அந்த பதவிக்கு சில சாத்தியமான நபர்களைத் தங்கள் தரப்பு கவனமாக மதிப்பீடு செய்து வருவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாலிஹா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், லாபுவானின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் நலனுக்காக சேவையாற்றக்கூடிய மிகவும் பொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிமானிஸ் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் டான் ஶ்ரீ அனிஃபா அமானின் பதவிக்காலம், கடந்த மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, லாபுவான் கழகத்தின் தலைவர் பதவிக்கான இடம் தற்போது காலியாக உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)