கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) - தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு முதல் முறையாக வரும் அக்டோபர் மாதத்தில் தேச கட்டமைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்யவிருக்கிறது.
அந்த இரண்டு நாள்கள் மாநாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைக்கவிருப்பதோடு தேச கட்டமைப்பு செயல்திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.
அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வின் தூணாக தேச கட்டமைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய திசையை இம்மாநாடு உருவாக்கும் என்று அவர் கூறினார்.
"ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுக்கான இறுதி தளமாக தேசிய அரசை நாங்கள் பார்க்கிறோம். எனவே, ஒருமைப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து செயல்பாடுகளும் ஒருமைப்பாட்டின் பன்முகத்தன்மையாகவோ அல்லது நல்லிணக்கத்தின் பன்முகத்தன்மையாகவோ இருந்தாலும், அதன் நோக்கம் தேசிய அரசை நோக்கிச் செயல்படுவதாகும். அங்கு எங்கள் நோக்கம் நாங்கள் மலேசியர்கள் என்று நம்மை அடையாளப்படுத்துவதாகும்," என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கையாக கடந்த மே மாதம் துறை நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் 35 பேரை உள்ளடக்கி 'Kumpulan Fokus' என்ற சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை பெர்னாமா தொலைக்காட்சி தயாரிப்பிலான Ruang Bicara என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏரன் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)