புத்ராஜெயா, 03 ஜூலை (பெர்னாமா) -- கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு மே 31-ஆம் தேதி வரை பல்வேறு அமலாக்க நிறுவனங்களிடமிருந்து இரண்டாயிரத்து 2,811 வழக்குகளை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் பெற்றுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் வரையில் பெறப்பட்ட 335 வழக்குகளில் பெரும்பாலானவை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் கடத்தல் மற்றும் கையாடல் குற்றங்களை உட்படுத்தியது என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.
"சமர்ப்பிக்கப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை எல்லை தொடர்பான சிக்கல்களை உட்படுத்தியுள்ளது. எனவே, கடத்தல் நடவடிக்கைகளில் கவனிக்க வேண்டியவை சில உள்ளன. எல்லை நுழைவாயில்களில் கே.பி.டி.என்-க்கு நிரந்தர அதிகாரிகள் இல்லை. குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உதவித் தொகை பெற்ற பொருளகளில் கையாடல் செய்து வெளிநாடுகளுக்கு கடத்துவது போன்றவற்றுடன் தொடர்புடையதாகும்" என்றார் அவர்.
பொது நடவடிக்கைப் படை, பி.ஜி.எ மிக அதிகமாக ஆயிரத்து 146 வழக்குகளைச் சமர்ப்பித்திருக்கும் நிலையில், கடற்படை போலீஸ் 866, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் 661 மற்றும் மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம் 69 வழக்குகளை வழங்கியுள்ளதாக டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.
கேபிடிஎன் அமைச்சிற்கு எல்லை நுழைவாயில்களில் நிரந்தர அதிகாரிகள் இல்லை.
மேலும், குடிநுழைவு துறை, பி.ஜி.எ மற்றும் சுங்கத் துறை போன்ற இதர நிறுவனங்களின் ஒப்படைப்பைப் பொறுத்து அது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)