ஸ்வாட், 28 ஜூன் (பெர்னாமா) -- வட பாகிஸ்தானில் ஆற்றுநீர் பெருக்கெடுத்ததில் சிறார்களும் அவர்களை மீட்கும் முயற்சியில் ஆற்றில் குதித்த உறவினர்களும் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஸ்வாட் நதிக்கரைக்கு சுற்றுலாச் சென்றிருந்த அவர்கள், ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக, மாவட்ட அதிகாரி ஷெசாட் மாஹ்புப் தெரிவித்தார்.
அச்சிறார்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட உறவினர்கள், பருவ மழையினால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி அவர்களும் மரணமடைந்ததாக ஷெசாட் கூறினார்.
மரண எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதிசெய்ய இயலவில்லை என்று கூறிய அவர் இதுவரை ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
80-க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் உட்பட அப்பகுதி மக்கள் காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மீண்டும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாகாண பேரிடர் நிர்வகிப்பு ஆணையம் வலியுறுத்தியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]