யங்கூன், 26 ஜூன் (பெர்னாமா) -- மியன்மாரில் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் தேர்தல்கள் நடைபெறும் என்று அந்நாட்டின் இராணுவ ஆட்சித் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இருப்பினும், இராணுவத் தலைவரின் அந்த அறிவிப்பை ஒரு வகையான மோசடி என்று அனைத்துலக பார்வையாளர்கள் கண்டித்திருக்கின்றனர்.
2021-ஆம் ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்த்து மியன்மார் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனால் இராணுவத்தை எதிர்த்து அந்நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டது.
இருப்பினும் அந்நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதற்கு பொதுத் தேர்தலே சிறந்த வழி என்று இராணுவம் கூறிவந்தாலும், அதற்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கண் துடைப்புக்காகவே பொதுத் தேர்தலை இராணுவம் ஊக்குவித்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அந்நாட்டின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கும் என்று நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)