கோலாலம்பூர், 16 மே (பெர்னாமா) -- தமிழர்களின் புலப்பெயர்வு இடமாற்றமாக மட்டும் இல்லாமல் மரபுகளைச் சுமந்து செல்லும் ஒரு பயணமாகும்.
அந்த வரலாற்றுப் பயணங்களையும் குடியேற்றங்களையும் சான்றுகளோடு கொண்டுச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முனைவர் சுபாஷினி கனகசுந்தரத்தின் 'தமிழர் புலப்பெயர்வு' எனும் நூல் வெளியீடு காணவுள்ளது.
மலேசிய தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் ஏற்பாட்டில் சனிக்கிழமை மே 17ஆம் தேதி கோலாலம்பூர், டான் ஶ்ரீ சோமா அரங்கில் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவரான முனைவர் சுபாஷிணி 2500 ஆண்டு கால தமிழர் புலப்பெயர்வு பற்றிய வரலாற்றை, பல நாடுகளுக்கும் பயணித்து விரிவாக ஆராய்ந்து சான்றுகளோடு இந்நூலை வெளியிடுகிறார்.
சுமார் 16 ஆண்டுகள் தரவுகளைச் சேகரித்து 10 அத்தியாயங்களுடன் 400 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வெளியிடுவதாக சுபாஷிணி தெரிவித்தார்.
''உலகளாவிய அளவில் தமிழர்களின் வரலாற்று விஷயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், அதிலும் குறிப்பாக கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு சில துறைகள் அறிமுகமாகியது. உதாரணமாக, ஐரோப்பிய தமிழியல் துறை. அதாவது, ஐரோப்பாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எப்படிப்பட்ட தொடர்பு உள்ளது, எவ்விதமான தமிழியல் ஆய்வுகள் அந்தக் காலக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன, அகராதிகள் எல்லாம் எப்படி வந்தது என்று ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் போது தமிழர்களின் புலப்பெயர்வு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது,'' என்றார் அவர்.
இதனிடையே, பினாங்கை பூர்வீகக் கொண்டு, தற்போது ஜெர்மனியில் பணியாற்றி வரும் சுபாஷிணி, தொடக்க காலம் முதல் மலேசியாவிற்குத் தமிழர்கள் மேற்கொண்ட பயணங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் இதில் இணைத்துள்ளார்.
தரவுகளையும் ஆவணங்களையும் சேகரிக்கும் போது பல சவால்களைச் சந்தித்திருந்தாலும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிக்குப் பின்னர், இந்நூல் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதாக அவர் தெர்வித்தார்.
''தமிழர்கள் புலம் பெயர்ந்த காலக்கட்டங்களில் அவர்களது பயணங்கள் குறிப்பாக, எந்த வகையான கப்பல்களில் அவர்கள் பயணித்தார்கள், எந்தக் காரணத்திற்காக அவர்கள் புலம் பெயர்ந்தார்கள், குறிப்பாக அடிமை வியாபாரம், அல்லது ஒப்பந்த கூலிகளாக சென்றக் காலக்கட்டம், பிறகு பல நாடுகளில் தோட்டங்களில் பணியாற்றி அடுத்த தலைமுறைகள் வந்தப் பிறகு எப்படி சம்பந்தப்பட்ட நாடுகளில் முக்கியத்துவம் பெற்றார்கள் என்றப் பலத் தகவல்களை இந்நூல் வழங்குகிறது,'' என்றார் அவர்.
பிற்பகல் மணி 3.30 தொடங்கி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 250 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காண்லில் சுபாஷிணி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)