புத்ராஜெயா, 13 மே (பெர்னாமா) -- இவ்வாண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் இணையத் தளத்தில் பரவிய 10 ஆயிரத்து 493 போலி உள்ளடக்கங்களையும் 30,427 மோசடி உள்ளடக்கங்களையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி நீக்கியுள்ளது.
முதலில், உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்து அடையாளம் காணாமல், மக்கள் இனி எதையும் வெறுமனே படித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த எண்ணிக்கை நிரூபிப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
துல்லியமான தகவல்கள் பகிர்வதை உறுதி செய்ய, பாதுகாப்பான இணைய பிரச்சாரத்தைச் செயல்படுத்துவதன் வழி பிள்ளைகளுக்கான இணைய தேவைகளில் மடானி அரசாங்கம் அக்கறைக் கொண்டுள்ளதாக தியோ நி சிங் கூறினார்.
"நம்மில் பெரும்பாலோர் இணையத்தில் இருந்து நேரடியாக தகவல்களைப் பெறுகிறோம். அது தவறல்ல. ஏனென்றால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இன்றைய முன்னேற்றங்களுக்கு நாம் தகவல்களைப் பெறுகிறோம். இருப்பினும், இணையத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கும் படிப்பதற்கும் இன்றைய சமூகம், அதிக இலக்கவியல் கல்வியறிவைப் பெற வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பெறப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது", என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சு அளவிலான Program Jom Baca Bersama நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
இவ்வாண்டு தொடங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்கள் உட்பட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் இப்பிரச்சாரத்தின் செயல்பாட்டை எம்சிஎம்சி அதிகரித்து வருகிறது.
இவ்வாண்டு மே முதலாம் தேதி வரை இலக்கவியல் நன்மைகள் மற்றும் சவால்கள் முன்கூட்டியே வெளிப்படுத்தப்படுவது தொடர்பில் 9 பள்ளிகளில் பாதுகாப்பான இணையப் பிரச்சாரம் அமல்படுத்தப்பபட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)