Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

போலீஸ் அதிகாரியின் காதை கடித்து துண்டாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்

30/04/2025 05:33 PM

கோலாலம்பூர், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த வாரம் போலீஸ் அதிகாரி ஒருவரின் காதை கடித்து துண்டாக்கி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை, தனியார் கல்லூரியில் பயிலும் Nigeria ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார்.

இம்மாதம் 25-ஆம் தேதி, கெப்போங், மெட்ரோ பிரிமாவில் உள்ள சிகிச்சையகத்தின் முன்புறத்தில், 36 வயதான கார்ப்ரல் டேனிருல் அஸ்ரக் அஹ்மத் கைர்க்கு எதிராக இச்செயலைப் புரிந்ததாக 38 வயதான ஒகேனிஹைக்கே கெல்வின் ஒபியான்கே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 325-இன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்ட நபர் எவ்வித பயண ஆவணங்களையும் கொண்டிருக்காததால், அவரது சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.

ஆகவே, மஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி அந்நபருக்கு ஜாமின் வழங்க அனுமதிக்காமல், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்தது மற்றும் போதைப் பொருளை உட்கொண்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும், மற்றொரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார்.

அவருக்கு ஜாமின் வழங்காத நீதிமன்றம், அவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)