சண்டாக்கான், 27 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி மடானி அரசாங்கத்தின் வியூகம், மக்களை ஈர்ப்பதிலும் வெல்வதிலும் வெற்றி பெற்றுள்ளதை நிரூபித்துள்ளது.
தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிட்ட டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர் பெற்ற பெரும்பான்மை வாக்குகள் அதிகரித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் பிரதிநிதியின் வாக்கு எண்ணிக்கை சரிந்துள்ளதை, மடானி அரசாங்க பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் சுட்டிக்காட்டினார்.
"20 வாக்களிப்பு மையங்களில் 19 மையங்களை மடானி அரசாங்கம் வென்றது. இது ஒரு நேர்மறையான அறிகுறி. எனினும், நாம் திருப்தியடைய முடியாது. இந்த வெற்றியை நிலைத்திருக்கச் செய்வதில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்," என்றார் அவர்.
இன்று சபா, சண்டாக்கினில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஃபஹ்மி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
ஆயர் கூனிங்கில் பிளவை ஏற்படுத்தும் இன ரீதியிலான பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்து ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)