தாப்பா, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் பகுதியில் வசித்த அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்புறங்களுக்கு சென்றுள்ளதால் தமது பிரச்சாரங்களின் போது மிகக் குறைவான இளைஞர்களையே காண்பதாகக் கூறுகின்றார் மலேசிய சோசலிச கட்சி, பி.எஸ்.எம் சார்பாகப் போட்டியிடும் பவாணி கன்னியப்பன்.
ஆயர் கூனிங் பகுதியில் நிலவளங்கள் இருப்பதால், அதனைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இயலும் என்று பவாணி கூறுகிறார்.
''அதிகமான இளைஞர்கள் ஆயர் கூனிங் பகுதியில் இல்லை. பிரச்சாரம் மேற்கொள்ளும் போது இளைஞர்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். அதிகமானோர் வேலை செய்ய கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று விட்டனர்,'' என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, விவசாயம் செய்து சுய தொழிலில் ஈடுபட ஆயர் கூனிங் பகுதி இளைஞர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
''ஆயர் கூனிங்கில் இயற்கை வளங்கள் உண்டு. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்,'' என்று அவர் தெரிவித்தார்.
ஆயர் கூனிங் பகுதியில் அடிப்படை வசதிகளிலும் குறைபாடு உள்ளதால், தாம் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அதற்கு உடனடி தீர்வுகாணப்படும் என்று அவர் பவாணி தெரிவித்தார்.
''மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல், மற்ற பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். அதனை மாற்ற வேண்டும். அரசியல்வாதிகள் மக்களின் குரலாக இருக்க வேண்டும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி சார்பில் தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் முஹமாட் யுஸ்ரி பாகிர் போட்டியிடும் வேளையில் பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து தாப்பா தொகுதி தலைவர் அப்துல் முஹைமின் மாலெக் மற்றும் மலேசிய சோசலிச கட்சி பொது செயலாளர் பவானி கன்னியப்பன் ஆகியோர் தேர்தல் களம் காண்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான 59 வயது இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)