அரசியல்

கே.கே.பி இடைத்தேர்தலை புறக்கணிக்கும்படியான உந்துதலுக்கு செவிசாய்க்காதீர்

10/05/2024 09:25 PM

பத்தாங் காலி, 10 மே (பெர்னாமா) -- தங்கள் புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாளை நடைபெறவிருக்கும் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்குமாறு அங்குள்ள இந்திய வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும்படி கூறும் சில தரப்பினரின் உந்துதலுக்கு செவிசாய்க்க வேண்டாமென்று கெஅடிலான் கட்சியின் தொடர்புப் பிரிவின் முதலாவது துணைத் தலைவரான டத்தோ இரமணன் இராமக்கிருஷ்ணன் வலியுறுத்தினார்.  

''இந்த இரு ஆண்டுகளில் நாம் பல நன்மைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம். அதனை மனதில் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்,'' என்றார் அவர். 

ஸ்பூமி எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும், தெக்குன் நேஷனல் “SPUMI GOES BIG” திட்டத்தின் விளக்கவுரையை அளித்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

இதனிடையே, 3 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற்றிருக்கும் அத்திட்டத்தின் மூலம் இந்தியர்களைப் பயன்பெறுமாறு தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான இரமணன் கேட்டுக் கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]