பொது

அமைச்சு & அரசாங்க நிறுவனங்கள் நிலையிலான தகவல்கள் பெற உயர்க்கல்வி மாணவர்களுக்கு அனுமதி

10/05/2024 06:45 PM

கோலாலம்பூர், 10 மார்ச் (பெர்னாமா) -- நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, இன்னும் இரண்டு வாரங்களில், அமைச்சு மற்றும் அரசாங்க நிறுவனங்கள் நிலையிலான தகவல்கள் மற்றும் ஆய்வுகளைப் பெறுவதற்கான அணுகல், உயர் கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் ஒருங்கிணைப்பில் மேகக் கணிமை சேவை வழியாக அந்த அணுகல் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில் Malaysia Artificial Intelligence Nexus, Boosting The Future எனும் நிகழ்ச்சியில் பிரதமருடனான கலந்துரையாடலின்போது, அன்வார் அவ்வாறு கூறினார்.

மையப்படுத்தப்பட்ட மற்றும் இணையம் வழியாக அணுகுவதற்கான உயர் தரமுள்ள கணினி சேவையை ஏற்படுத்தி தருவதில் நாட்டின் தயார் நிலை குறித்து வினவப்பட்டபோது பிரதமர் விளக்கமளித்தார்.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவுத் துறையில் தங்களின் உயர் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகள் குறித்து கருத்துரைத்த அன்வார், அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, தற்போதைய அடைவுநிலையின் அடிப்படையில் அலவன்ஸ் தொகை தொடரப்படும் என்று விவரித்தார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)