பொது

செந்தூலில் களைக் கட்டியது சித்ரா பௌர்ணமி

23/04/2024 08:20 PM

செந்தூல், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலும் சித்ரா பௌர்ணமி விழா களை கட்டியிருந்தது.

அதிகாலை ஐந்து மணி தொடங்கியே அந்த ஆலயத்தில் வழக்கமான பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் 108 சங்காபிஷேகத்திற்கான பூஜை நடத்தப்பட்டதாக ஆலயத்தின் செயலாளர் மெய்யப்பன் மாணிக்கம் தெரிவித்தார்.

''பௌர்ணமி சமயத்தில் எப்போதுமே சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று சித்ரா பௌர்ணமி வெகு விமரிசையாக இருந்தது. பக்தர்கள் பலரும் இந்நாளில் பால்குடம் ஏந்தி தங்களின் வேண்டுல்தல்களை நிறைவேற்றினர்,'' என்று செந்தூல் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் செயலாளர் மெய்யப்பன் மாணிக்கம் தெரிவித்தார். 

சித்ரா பௌர்ணமியின் சிறப்பம்சம் குறித்து ஆலய குருக்களான, நவநீத கிரி குருக்கள் விவரிக்கிறார்.

''இம்மாதம் தைரியத்தை ஊட்டும் மாதமாக கருதப்படுகிறது. தடைக்கற்களை படிகற்களாக மாற்றினால் எண்ணுவது யாவும் சிறப்பான முறையில் நடைபெறும்,'' என்று ஆலயத்தின் குருக்கள்  நவநீத கிரி குருக்கள் தெரிவித்தார். 

மேலும், வேலனுக்கு மட்டுமின்றி, சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் கூட இந்நாள் சிறப்பாக கொண்டாட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

வேலை நாளாக இருந்தாலும் ஆலயத்தின் சிறப்பு பூஜையில் அதிகாமானோர் கலந்து கொண்டனர்.

''இந்த நல்ல நாளில் முருகனை வழிபட வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். உலக மக்கள் அனைவரின் நல்வாழ்விற்காகவும் வேண்டிக் கொண்டதாக,'' கெப்போங்கைச் சேர்ந்த தயாளன் கிருஷ்ணன் நடராஜா மற்றும் செந்தூலைச் சேர்ந்த தவமலர் லெட்சுமணன் ஆகியோர் தெரிவித்தனர். 

இன்று காலை தொடங்கி மதியம் வரை வெயில் சற்று கூடுதலாகவே இருந்தாலும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)