பொது

ஆடவர் கொலை; சந்தேக நபர்கள் ஐவர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்

26/02/2024 09:49 PM

கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- சிலாங்கூர், செமினியில் கடந்த வாரம் விபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயற்சித்த 42 வயதான ஆடவர் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.

அந்த ஐவரும் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முஹமாட் சாயிட் ஹசான் தெரிவித்தார்.

கொலை செய்த குற்றத்திற்காக அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் குற்றம் சாட்டப்படவிருக்கின்றனர்.

விபத்திற்குக் காரணமான 42 வயதான அந்த நபர், காரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படும் 23 மற்றும் 40 வயதான ஐந்து சந்தேக நபர்களை காஜாங் வட்டாரத்தில் போலீஸ் கைது செய்தது.

பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு 9:20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்திற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட அந்நபர் ஓட்டி வந்த புரோட்டன் சாகா ரக கார் கட்டுப்பாட்டை இழந்து, வீடமைப்புப் பகுதியில் மோதியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)