பொது

மடானி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இந்தியர்களின் வருகை குறைவு

08/12/2023 08:25 PM

கோலாலம்பூர், 08 டிசம்பர் (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியின் கொண்டாட்டம் இன்று தொடங்கியது.

மக்களுக்கான சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு பொது மக்கள் ஆர்வத்தோடு வருகைப் புரிந்தாலும், இந்தியர்களில் பெரும்பாலான மக்களுக்கு அது குறித்த விவரம் தெரியாததால், அவர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது.

அரசாங்க கல்வி கழகங்களில் மாணவர் பதிவு, வணிக வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொழில்முனைவோருக்கான திட்டம், மடானி மற்றும் ரஹ்மா விற்பனை உட்பட பல தரப்பட்ட திட்டங்கள் ஆகியவை இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் மற்றும் போக்குவரத்து சம்மன்களைச் செலுத்துவதற்காக மட்டுமே சில இந்தியர்கள் இங்கு வருகைப் புரிந்துள்ளனர்.

அதன் பின்னரே, இங்குள்ள சலுகைகளும் திட்டங்களும் தங்களுக்கு தெரிய வந்துள்ளதாகவும் அதனை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

''நடமாடும் சிகிச்சையங்கள் உட்பட பல வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்,'' என்றார் பல் மருத்துவர் டாக்டர் கனகேஸ்வரி சந்தியசீலன்.

''எஸ்.பி.எம் உட்பட பல தேர்வுச் சான்றிதழ்கள் இல்லாமல் வேலை வாய்ப்பு பெறுவதில் சிலர் சிரமத்தை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகின்றோம்,'' என்றார் தேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநர்  ரவிந்திரன்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் ஒவ்வோர் அமைச்சும் அமைக்கப்பட்டிருக்கும் முகப்புகளில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான வாய்ப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

இந்த வாய்ப்பை பொது மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502