பொது

மலேசிய லீக் கிண்ண இறுதி ஆட்டம்; சர்ச்சையை எழுப்பும் தரப்பினருக்கு எச்சரிக்கை

08/12/2023 07:05 PM

கோலாலம்பூர், 08 டிசம்பர் (பெர்னாமா) -- புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் JDT மற்றும் திரங்கானு FCக்கு இடையிலான 2023 மலேசிய கிண்ண இறுதி ஆட்டத்தின்போது சினமூட்டும் வகையில் நடந்துகொள்ள முயற்சிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக அரச மலேசிய போலீஸ் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றிரவு சர்ச்சையை எழுப்பும் எந்தத் தரப்போடும் அரச மலேசிய போலீஸ் படை ஒருபோதும் சமரசம் காணாது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

"எவரையும் யாரும் தூண்டிவிட முயற்சிக்காதீர்கள். பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள யாரும் ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. ஏனெனில், எப்போதும் கண்காணிப்போம். உதாரணத்திற்குச் சமூக ஊடகம் மூலம் நாங்கள் கண்டறியத் தொடங்கிவிட்டோம். ஏதேனும் பிரச்சனையைத் தூண்ட முயற்சிக்கும் யார் மீதும் நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம். குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 160,147 மற்றும் 148இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டுவோம்", என்றார் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. சம் ஹலிம் ஜமாலுடின்.

இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளியேறிய 'APA KHABAR MALAYSIA'  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹலிம் ஜமாலுடின் அவ்வாறு கூறினார்.

இன்றிரவு, 80,000க்கும் அதிகமானோர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஒன்றுக்கூடுவர் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுமூகமான போக்குவரத்து உட்பட இந்த இறுதி ஆட்டம் எவ்வித அசம்பாவிதமின்றி நடைபெறுவதை உறுதிச் செய்ய 1,400 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக சம் ஹலிம் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)