பொது

குப்பை லோரியை மோதிய கார்; 3 இந்திய இளைஞர்கள் பரிதாப மரணம்

14/11/2023 07:40 PM

ஈப்போ, 14 நவம்பர் (பெர்னாமா) -- ஈப்போ அருகிலுள்ள, பெர்சாம் தொழில்துறை பகுதியில் நேற்றிரவு குப்பை லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான காரில் பயணித்த, மூன்று இந்திய இளைஞர்களிடன் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.

ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவிலிருந்து, அச்சடலங்களை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

95 விழுக்காடு முற்றாக தீக்கிரையாகிய புரோட்டோன் பெர்டானா ரக காரைச் செலுத்திய எம். கிருஷ்ணா, அவரின் தம்பி எம்.பவிலேஷ் மற்றும் அவர்களின் உறவினரஷென்.கே. சுபாஷ் வர்மன் ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.

தஞ்சோங் ரம்பத்தானிலிருந்து இவர்கள் செலுத்தி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை வளைவைக் கடக்கும் போது எதிர் திசையில் வந்த குப்பை லோரியின் முன்புறத்தை மோதியதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹயா ஹசான் தெரிவித்தார்.

இதனால் குப்பை லோரியின் அடியில் சிக்கிக் கொண்ட அக்கார் திப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இவ்விபத்து குறித்து இரவு 8.05 மணியளவில் தமது தரப்புக்கு அழைப்பு கிடைத்ததாக பேராக் மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மட் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈப்போ மற்றும் தம்பும் மாவட்ட தீயணைப்பு மீட்புப் படையுடன், பெர்ச்சாம் தன்னார்வலர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார்.

பளுதூக்கியின் உதவியுடன் குப்பை லாரியை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து, அக்காரில் இருந்த அனைவருமே உடல் கருகி மாண்டது உறுதி செய்யப்பட்டதாக சபாரொட்சி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)