பொது

ஆரோக்கியமற்ற வெள்ளைச் சீனி பயன்பாட்டை நிறுத்துவீர்

13/11/2023 07:50 PM

ஜார்ஜ்டவுன், 13 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 26 தேக்கரண்டி வெள்ளைச் சீனியை உட்கொள்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் இந்தியர்களே அதிகம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

நாட்டில், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 36 லட்சம் பேர் நீரழிவு நோய்க்கு ஆளாகி இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு 5 மலேசியர்களில் ஒருவருக்கு நீரழிவு நோய்க் கண்டிருப்பதாகவும், நீரழிவு ஏற்பட்ட ஐவரில் நால்வர் இருதய நோயால் இறப்பதாகவும் அத்தகவலில் விவரிக்கப்பட்டிருந்தது.

அவர்களில் மலாய்க்காரர்கள் 15.25 விழுக்காடு மற்றும் சீனர்கள் 12.87 விழுக்காடு என்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களின் பாதிப்பு நிலை 25.10 விழுக்காட்டிற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளதை சுப்பாராவ் 
சுட்டிக் காட்டினார்.

இந்திய உணவுகளில் வெள்ளைச் சீனியின் புழக்கம் அதிகம் உள்ளதே இதற்கு முதன்மைக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக சுப்பாராவ் தெரிவித்தார். 

"அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில் ஒரு நாளைக்கு ஒருவர் சராசரியாக ஐந்து தேக்கரண்டி சீனியை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. நாம் உண்ணும் சோறு, உணவுகள், தின்பண்டங்கள், பழங்கள், இனிப்புவகைகள் என்ரு அனைத்தையும் உட்படுத்தியே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

இது உடல் பருமனுக்கு வித்திடுவதோடு, பல்வேறு உபாதைகளையும் ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

"அதுமட்டுமின்றி பார்வைக் குறைவு, தசை - மூட்டு விலை, சிறுநீரகக் கோளாறு, கை கால்கள் வீக்கம் என்று பல பிரச்சினைகள் ஏற்படும். முன்பெல்லாம் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த நீரிழிவு நோய் தற்போது இரண்டு வயது சிறுவர்களைக் கூட தாக்குகிறது," என்றார் அவர்.

ஆகவே, முடிந்தவரை வீட்டில் வெள்ளைச் சீனி பயன்பாட்டை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக  பாரம்பரிய நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சுப்பாராவ் ஆலோசனைக் கூறினார். 

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதியை நீரிழிவு தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரிப்பதை முன்னிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]