சிறப்புச் செய்தி

பார்வையற்றவர்களும் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு

07/08/2022 08:09 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பார்வையற்றவர்களும் யோகா பயிற்சியைக் கற்று, ஆரோக்கிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தர்மம் தலைக்காக்கும் எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பு அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் யோகா ஆசிரியர் ஒருவரின் உதவியுடன், தேர்தெடுக்கப்பட்ட சில பார்வையற்றவர்களுக்கு அவ்வமைப்பு யோகா பயிற்சியை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயதுடைய இளம் யோகா ஆசிரியரான கே.பிரிஷா, இதுவரை 70 உலக சாதனைகளைப் படைத்திருக்கின்றார்.

பார்வையற்ற நபர் ஒருவர் யோகா கலையில் உலக சாதனைப் படைப்பதற்கும் பிரிஷா காரணமாக இருந்திருக்கின்றார்.

அவரின் யோகா கலை இங்குள்ள மக்கள் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் 14 நாட்கள் யோகா பயிற்சி திட்டத்தை தமது அமைப்பு ஏற்பாடு செய்ததாக அதன் தலைவர் என்.மகேந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, பார்வையற்றோர் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இரண்டு ஆண்டுகளாக இலவசமாக யோகா பயிற்சியை வழங்கி வருகின்றார் பிரிஷா.

யோகா சிகிச்சை தொடர்பில் புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கும் பிரிஷா, தமது பாட்டி, அம்மாவைப் பின்பற்றி ஒரு வயது முதலே யோகா பயிற்சியைச் செய்யத் தொடங்கியதாக தெரிவித்தார்.

''உலகத்திலேயே முதன் முறையாக பார்வையற்றவர்களுக்கான இளம் யோகா ஆசிரியர்கான சான்றிதழைப் பெற்றிருக்கின்றேன். இளம் வயதில் அதிகம் உலகம் சாதனைப் படைத்த பெருமை எனக்கு கிடைத்திருக்கின்றது,''

தம்மிடம் யோகா பயிற்சிப் பெற்றவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த மாற்றத்தை அவ்வப்போது பகிர்ந்துக் கொள்வார்கள் என்றும் அது தமக்கு ஊக்குவிப்பாக அமைவதாகவும் பிரிஷா தெரிவித்தார்.

அந்த வகையில், நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் இரண்டு நாள் நடைபெற்று வரும் யோகா பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பிரிஷாவிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.  

இங்கு யோகா கற்றதன் வழி மனதும் உடலும் ஒரு நிலையாக உள்ளது. பயிற்சி எளிமையாக இருந்தாலும் அதன் பயன் சிறப்பாக உள்ளது. இதன் வழி,  பார்வையற்றவர்களும் ஆரோக்கியமான வாழ்வை கடைப்பிடிக்க முடியும், என்றுக் கூறினர்.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் தேதிகளில், கிள்ளான், செந்தோசாவிலுள்ள ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் மாலை 5 மணி தொடங்கி இரவு 8 மணி வரையில் இந்த யோகா பயிற்சி நடைபெறவிருக்கிறது.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)