Monday, 18 Jan 2021
உலகம்
14/01/2021 05:30 PM

லிமா, 14 ஜனவரி (பெர்னாமா) -- பெருவில் கொவிட்-19 நோய்த் தாக்கத்தை எதிர்க்கொள்வதில் மோசமான நிலையில் இருக்கும் சுகாதாரத் துறையை மேம்படுத்த அதிக ஒதுக்கீடு வழங்குமாறு கோரி அந்நாட்டுச் சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

அரசாங்கம் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக மருத்துவர்களும், தாதியர்களும், சுகாதார பணியாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

லிஸ்பன், போர்த்துகல் 

போர்த்துகலில் கொவிட்-19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோனியோ கோஸ்டா அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் இப்பொது முடக்கத்தின்போது வீட்டிலேயே இருக்குமாறும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

நியூ யார்க், அமெரிக்கா

அமெரிக்க வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இரண்டு முறை கண்டனத் தீர்மானத்திற்கு ஆளான முதல் அதிபராக டொனல்ட் டிரம்ப் விளங்குகிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வன்முறையைத் தூண்டிவிட்டதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டி அவரைப் பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் டிரம்பிற்கு எதிரான இவ்விரண்டாவது கண்டன தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனால், டிரம்பிற்கு எதிராக 232 வாக்குகள் பெறப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக 197 வாக்குகளே கிடைத்துள்ளது.

ஜகார்த்தா, இந்தோனேசியா

கடந்த சனிக்கிழமை இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்டுக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் போயிங் 737-500 விமானத்தின் எஞ்சிய கருப்புப் பெட்டியையும் இச்சம்பவத்தில் காணாமல் போன 62 பேரையும் தேடும் பணிகள் இன்று வியாழக்கிழமை தொடரப்பட்டிருக்கின்றன.

மோசமான வானிலை மற்றும் கடும் அலை காரணமாக நேற்றுப் புதன்கிழமை இத்தேடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க