சிறப்புச் செய்தி

மனிதவள அமைச்சரின் பொங்கல் வாழ்த்து

13/01/2021 09:06 PM

கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- தமிழர்களின் பண்டைய கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள், விழாக்கள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றித்து இருப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் வித்திடுவதாக, மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்திருக்கிறார்.

அவ்வகையில், தை மாதத்தில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, இயற்கைக்கு நன்றி கூறும் பெருநாளாகக் கருதப்படுவதாக, அத்திருநாளைக் முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அறுவடைத் திருநாளாகவும் அறியப்படும் தைப்பொங்கலில் விவசாயிகளின் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், அவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அமைகிறது.

இந்நிலையில், கொவிட்-19 நோய் இருக்கும் வரை பழைய வாழ்க்கை முறை சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட அவர் புதிய நடைமுறைகளுடன் கொவிட்-19 நோய்க்கான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து இப்பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

''தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விட்டது. விரைவில் இந்த உலகம் கொவிட்-19 நோய் பரவலில் இருந்து முழுமையாக விடுபடும் என்று நான் நம்புகிறேன்.
அதுவரை கொஞ்சம் பொறுமை காப்போம்,'' என்று சரவணன் தெரிவித்தார்.

அதே வேளையில், மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசாங்கம் அமல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மூலம் தேவையான உதவிகளைப் பெற்று பயனடையுமாறும் அவர் கேட்டு கொண்டார்.

இவ்வேளையில், சிறு தொழில் மற்றும் பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிமார்கள், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதுடன், அனைத்துலக பரவலைத் தடுக்க பணியாளர்களுக்கு சுத்தமான சூழல், இடைவெளி விட்டு இருக்க இடம் போன்ற புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகளை செய்து கொடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

''இந்த தைத்திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழல் நமக்காக உண்டு என்று நம்பிக்கையோடு வாழ்வோம்,'' என்று அவர் கூறினார்.

--பெர்னாமா