பொது

போலியான தேசிய எல்லை முத்திரை பயன்படுத்திய வழக்கு; ஒருவர் கைது

22/11/2020 07:43 PM

புத்ராஜெயா, 22 நவம்பர் (பெர்னாமா) --நாட்டின் எல்லையில் போலியான தேசிய எல்லை முத்திரைகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, குடிநுழைவுத் துறையின் KP19 நிலை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

தடுப்பு காவல் உத்தரவை விண்ணப்பிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மின் அதிகாரிகள், அவரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

KLIA 2-இல் பணி புரியும் அச்சந்தேக நபருக்கு இன்று தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை, 6 நாட்களுக்கு, மஜிஸ்டிரேட் சித்தி ரோஸ்லிஸாவாத்தி ஸானின் (SITI ROSLIZAWATI ZANIN) தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்தார்.

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்‌ஷன் 16 மற்றும் கள்ளப்பண பரிமாற்றம், பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியது மற்றும் 2001-ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கையினால் பெறப்படும் நிதி சட்டம் ஆகியச் சட்டங்களின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட OP SELAT நடவடிக்கையில், KLIA, KLIA 2 மற்றும் ஜோகூர், ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் பணிபுரியும் 34 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உட்பட 54 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

புத்ராஜெயா, ஜோகூர் பாரு, கூச்சிங் மற்றும் கோத்தா கினாபாலுவில் செயல்படும் குடிநுழைவுத் துறைகளின் ஒத்துழைப்புடன் SPRM இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

--பெர்னாமா