உலகம்

அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொவிட்-19 நோயினால் உயிர் இழப்புகள் அதிகரிக்கலாம்

15/09/2020 03:17 PM

ஜெனிவா, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொவிட்-19 நோய் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகள், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கலாம் என்று, உலக சுகாதார நிறுவனம் WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆகவே, பல நாடுகளில் தளர்வுகள் வழங்கப் பட்டிருந்தாலும், விதிக்கப்படும் கட்டுப் பாடுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், WHO கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 நோய் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 

உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைந்ததால் அமலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த சில நாட்களாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கொவிட்-19 சம்பவங்கள் உயர்ந்து வருகின்றது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் இப்பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக WHO கூறுகிறது. 

-- பெர்னாமா