விளையாட்டு

2019/2020 இங்கிலாந்து எப்.ஏ கிண்ணத்தைக் கைப்பற்ற போவது யார்?

01/08/2020 08:10 PM

லண்டன், ஆகஸ்டு 01 (பெர்னாமா) --  2019/2020 இங்கிலாந்து எப்.ஏ கிண்ணத்தைக் கைப்பற்ற போவது யார்? 

செல்சியும் ஆர்சனலும் இன்று பின்னிரவு வேளையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் களம் காணவிருப்பதால், வெற்றி யாருக்கு என்பது அதன் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பருவத்தில், இங்லீஷ் பிரிமியர் லீக் போட்டியில் சோபிக்க தவறினாலும், எப்.ஏ கிண்ணத்தைக் கைப்பற்றும் இலக்கோடு, தீவிரமாக களமிறங்கும் இவ்விரு அணிகள் குறித்து, அதன் ரசிகர்களிடையே பெர்னாமா தமிழ்ச் செய்தி மேற்கொண்ட ஒரு கருத்து கணிப்பைத் தொடர்ந்து காண்போம். 

இங்லீஷ் பிரிமியர் கிண்ண போட்டியில், செல்சி  நான்காவது இடத்தைப் பிடித்து ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருக்கும் வேளையில், ஆர்சனல் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க நேர்ந்தது. 

ஆனால், எப்.ஏ கிண்ண ஆட்டங்களில், அதுவும் முன்னணி அணிகளைத் தோற்கடித்து, சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்து, இறுதி ஆட்டத்தில் கால் பதித்துள்ளதால் இவ்வாட்டத்தில் ஆர்செனல்  நிச்சயம் வெற்றுப்பெறும் என்று அதன் ரசிகர்களான சுஜேன் கணேசன், விக்கினேஸ்வரன் ராமன், வினோதனன் ஜெகராஜன் ஆகியோர் பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறினர். 

இதனிடையே, பிரான்க் லம்பார்ட்டின் தலைமையில் ''தி புலூஸ்'' எனப்படும் செல்சியையும் இங்கு குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு, அதன் முன்னணி ஆட்டக்காரர்களின் அதிரடி படைப்பார்கள் என்று செல்சி ரசிகர்களான மு.வேலாயுதம், பரணன் ராஜமாணிக்கம் போன்றவர்களும் பெரும் நம்பிக்கைக்கொண்டுள்ளனர். 

இரண்டு  நிர்வாகிகளும் அந்தந்த அணிகளின் முன்னாள் விளையாட்டாளர்கள் என்பதால், இந்த பருவத்தை வெற்றிகொள்ள அவர்களின் வியூகமும் மிகவும் சமர்த்தியாமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அர்செனல் தாக்குதல் ஆட்டக்காரர் எமிரிக் ஒளபாமேயாங்  ஒரு புறமும் செல்சியின் ஒலிவர் ஜீரோட்டு மறு புறமும் , தலைமையேற்றுத் தாக்குதல்களைத் தொடுக்க மத்திய திடலில் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அணியே வெற்றி வாகை சூடவிருக்கிறது.