பொது

ஜூலை 20-ஆம் தேதி வரை பி.பி.என். திட்டத்தின் கீழ் 1014 கோடி ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது

22/07/2020 05:08 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- 2020-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி வரை, பி.பி.என். எனப்படும் தேசிய பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 14 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கியுள்ளது. 

PRIHATIN எனப்படும் தேசிய பரிவுமிக்க உதவித் திட்டம் மற்றும் PENJANA எனப்படும் தேசிய பொருளாதார மீட்புத் திட்டங்களின் கீழ், 13 கோடியே ஒன்பது லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார். 

அதில், இதுவரை 12 கோடியே ஐந்து லட்சம் ரிங்கிட் அல்லது ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு அந்நிதி உதவி வழங்கப்பட்டுவிட்டது. PRIHATIN எனப்படும் பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் அமலாக்க அடைவு நிலை, ஜூலை 20-ஆம் தேதி வரை 91 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 1430 கோடி ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

பி.பி.என்., உயர்கல்விகழக மாணவர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என பல தரப்பினர்களுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பி.எஸ்.எச். எனப்படும் வாழ்க்கைச் செலவின உதவி நிதியின் மூன்றாம் கட்ட கட்டணம் ஜூலை 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். 300 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இந்த உதவு திட்டத்தின் கீழ் சுமார் 42 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைவர்.

-- பெர்னாமா