பொது

கொவிட்-19 அரசாங்க உதவி: நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக காத்திருக்க முடியாது

13/07/2020 06:19 PM

கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றின் பரவலைக் கையாளும் முயற்சியில், உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மக்களவையில் தாக்கல் செய்யப் படாமலேயே, பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை அறிவிக்க நேரிட்டது.

அக்காலக்கட்டத்தில் மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கியதால், அவர்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டதாக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். 

அதற்காக, திங்கட்கிழமை தொடங்கவிருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக, தமது அரசாங்கம் காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். 

"நாங்கள் எதிர்நோக்கி இருந்த மிகப் பெரிய பிரச்சனை, எவ்வாறு கொவிட்-19 நோயை நிர்வகிப்பது மற்றும் கையாளுவது என்பதாகும். இந்த கடினமான சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்பது பொது மக்களுக்கு தெரியும்," என்று முகிடின் தெரிவித்தார்

கொவிட்-19 நோய் தாக்கத்தைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது உட்பட இதர முக்கியமான நிதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கான காரணம் குறித்து எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலாளித்தார். 

-- பெர்னாமா