பொது

மலேசிய திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் உருவாக்கம்

30/06/2020 08:31 PM

சிலாங்கூர், 30 ஜூன் (பெர்னாமா) --கொவிட்19 பெருந்தொற்று தாக்கத்தின் காரணமான, திருமணம் நடத்த திட்டமிடும் தரப்பினருக்கு உதவி புரியும் நோக்கத்தில், PPMPM எனப்படும் மலேசிய திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இக்கால கட்டத்தில் வேலை இழந்தவர்களுக்கு, அச்சங்கத்தின் மூலம், தொழில் துறைகளின் வழி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தாங்கள் உத்தேசித்திருப்பதாக அதன் தலைவர் ஜரீனா மொகிதீன் கூறியிருக்கின்றார். 

நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் வேலை இழந்த மலேசியர்களுக்கு இந்தச் செயல் திட்டம் நிச்சயம் உதவும் என்றும் ஜரீனா மொகிதீன் தெரிவித்தார். 

நாடு முழுவதும் மிகப்பெரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கொண்ட PPMPM சுமார் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க சங்க உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் அவர் குறிப்பிட்டார். 

நெருக்கடியான இக்கால கட்டத்தில், இஸ்லாமியர்களின் திருமணம் சார்ந்த எந்த அமைப்புகளும் செயல்படாதது குறித்து தாம் அறிந்து கொண்டதால், அவர்களின் நலனை பாதுகாக்க இச்சங்கம் தொடங்கப்பட்டதாகவும் ஜரீனா கூறினார். 

அதோடு, தொழில் துறை ரீதியாக திருமண கூடாரங்கள், உணவு வகைகள், கேமரா ஒளிப்பதிவு, நிழல் படம், அலங்காரம், வாடகை உடைகள், மேசை நாற்காலிகள், ஒப்பனை, தையல் என்று பல வழிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். 

சிலாங்கூர் பத்துமலையில், உள்ள எமரோட் மாநாட்டு மண்டபத்தில் சங்க உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கடந்த ஜூன் 18-ஆம் தேதி பதிவு பெற்ற இந்தச் சங்கத்தில் தற்போது நாடு தழுவிய நிலையில் 841 உறுப்பினர்கள் இணைந்திருப்பதுடன். இது, மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதிப்பதால், இத்துறை சார்ந்த அனைத்து தொழில் முனைவர்களும் இதில் பதிய, ஜரீனா அழைப்பு விடுத்துள்ளார். 

திருமணத்தை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளும் நிச்சயம் கடைபிடிக்கப்படும் என்றும் ஜரீனா உறுதியளித்தார். 

--பெர்னாமா