பரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டம் வரவேற்ககூடியது - ஃபோம்கா

20/06/2020 07:28 PM

கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் மின்சார பயனீட்டாளர்களுக்கு உதவும் நோக்கில், பரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்திட்டத்தின் மூலம் 70 லட்சத்து 66 ஆயிரம் பயனீட்டாளர்கள் பயனடைவதால், இது ஒரு சிறந்த திட்டம் என்றும், வரவேற்க கூடிய ஒன்று என்றும், மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம், ஃபோம்காவின் தலைமை செயல்முறை அதிகாரி சரவணன் தம்பிராஜா தெரிவித்திருக்கின்றார். 

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிகேபியின் போது, அதிகமான வேலை இழப்பு காரணமாக மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். 

அதோடு, மின்சார கட்டணம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, அரசாங்கத்தின் சிறந்த ஒரு முடிவு என்றும் சரவணன் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, கொவிட்-19 காரணமாக நாடு எதிர்நோக்கி வரும் இக்கட்டான சூழலில், இந்த கூடுதல் மின்சார உதவித் திட்டம் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் சரவணன் குறிப்பிட்டார். 

இதனிடையே, முறையான தகவலை அறிந்து பொறுப்பான பயனீட்டாளராக இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

-- பெர்னாமா