சிறப்புச் செய்தி

பிகேபியினால் பொருளாதார ரீதியில் திரைப்பட தொழில்துறை பெரும் பாதிப்பு

20/05/2020 07:21 PM

கோலாலம்பூர், 20 மே (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபி காலகட்டம், மக்கள் இயல்பு வாழ்வை மாறுபட்டகோணத்தில் எதிர்கொள்ள வைத்தது. 

இதில், திரைப்பட தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும் அதனையே வாழ்வாக கொண்டவர்களுக்கும் இந்த புதிய நடைமுறை, வருமான ரீதியில் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை. 

கலை உலகத்தைச் சார்ந்தோருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி குறித்து பெர்னாமா தமிழ்ச்செய்தி மேற்கொண்ட ஒரு கண்ணோட்டம் அடுத்து இடம் பெறுகிறது. 

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக, வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை தொட முடியாமலும் உள்ளூர் திரைப்படத் துறை மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 

ஒரு நாள் பணியாக இருந்தாலும் கூட, அதன் வருமானம் ஒரு மாதத்தைச் சார்ந்தே கலைஞர்களுக்கு அமைந்திருப்பது அவர்களின் வாழ்வாதாரமானது. 

இந்நிலையில், தயாரிப்பளர்கள் சங்கம் தொடங்கி, இயக்குனர்கள்,விநியோகஸ்தர்கள் நடிகர்கள், தொழில்நுட்படம் மற்றும் இசைக் கலைஞர்கள், என்றும் மொத்தமாக திரைப்படத் துறையைச் சார்ந்த அனைவருமே இக்கால கட்டத்த்தில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக, நாட்டில் நன்கு பிரபலமான சில இயக்குநர்களும் நடிகர்களும் கூறினர். 

அதேவேளையில், அரசாங்கத்தின் இந்த அனுமதிக்கு அவர்கள் தங்களின் நன்றியையும் பதிவுச் செய்தனர். 

நோன்பு பெருநாளுக்கு முன்பே, தங்களின் பணிகள் தொடங்குவதற்கு மலேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்த போதிலும், நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த கோரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

தற்போது, தொடர்பு பல்லூடக அமைச்சு இதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும், மலேசிய திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் செயல்பாட்டு தர விதிமுறையை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதும் இங்கு நினிவூட்டலாக வைக்கப்படுகிறது. 

இதனிடையே, நோன்பு பெருநாளுக்கு பிறகு தொடரப்பட்டும் படப்பிடிப்பு பணிகளான, நேர்காணல்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் இயங்கலை வழியாக முதலில் தொடங்கப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோக் இன்று அறிவித்திருந்தார். 

படப்பிடிப்புக்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே, அனைத்து தயாரிப்பு மற்றும் பணியாளர்களும் தங்களின் பயண பதிவுகளை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நினைவூட்டப்படுகிறார்கள். 

ஒவ்வொரு படப்பிடிப்பிலும் 20--க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் அவர் உறுதியாக கூறியிருக்கிறார். 

எஃப்டிஏஎம் தகவலின் படி, கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி முதல் கட்ட பிகேபி அமலுக்கு வந்ததிலிருந்து 35 தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட 875 திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. 

-- பெர்னாமா