சிறப்புச் செய்தி

யூடியுப் காணொளியின் பயனைப் பலனாகப் பெற்றனர், சுகு பவித்ரா..!

19/05/2020 07:12 PM

சுங்கை சிப்புட், 19 மே (பெர்னாமா) -- எளிமையாகவும் சரளமாகவும் மலாய் மொழியில் பேசி, சமையல் கலையின் மூலம் வலையொளியான யூடியுப்பில் பிரபலமான சுகு பவித்ரா என்ற, எஸ். பவித்ராவும் அவரது கணவர் சுகுவும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தை முதல் சம்பளமாக பெற்றிருக்கின்றனர். 

ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை செலுத்தப்படாத தொகையைப் பெறுவதற்காக சென்ற அவர்கள் சுங்கை சிப்புட்டில் இருக்கும், தபால் நிலையைத்தில் மொத்தமாக அதனைப் பெற்றதில் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி இருக்கின்றனர். 

ஈப்போ புந்தோங்கைச் சேர்ந்த பவித்ரா, தமது சமையல் குறிப்புகளை மலாய் மொழியில் பேசி, எதார்த்தமான காணொளியாக்கியதன் பயனை தற்போது பலனாக பெறுகின்றார். 

ரசிக்க வைக்கும் அவரின் இயல்பான பேச்சும், ருசிக்க வைக்கும் சமயல் குறிப்பும்  தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் நாட்டின் பிரதமர் டான்ஶ்ரீ முகிடின் யாசினின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான பவித்திரா தமது முதல் சம்பளத்தில், தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் நல்ல உடைகளை வாங்க வேண்டும், சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று தமது பாணியில் எதார்த்தமாக கூறி இருப்பதும் அவரது வெகுளித்தனத்தை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. 
 
வறுமையான நிலையில் இருக்கும் தமது குடும்பத்திற்கு இந்த வலையொளி மூலம் கிடைத்திருக்கும் தொகை மிகவும் பெரியதாக கருதப்படுவதாகவும் பவித்திரா கூறினார். 

இந்நிலையில், தம்மை பிரபலப்படுத்திய பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். பலர் தம்மை தொடர்ந்து கொண்டு நேர்காணல் செய்தாலும், தம்மை முதலில் மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பெர்னாமாவையே சேரும் என்றும் அவர் கூறுகின்றார். 

இதனிடையே, கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கி முகநூல், இண்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு சமூக  ஊடகங்களின் மூலம் தங்களின் இந்த முயற்சியை இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் தாங்கள் காணொளிகளைப் பதிவு செய்து வருவதாக கூறப்படுவதை பவித்ராவின் கணவர் சுகு மறுத்திருக்கின்றார். 

வலையொளி ஒன்றின் மூலம் மட்டுமே தாங்கள் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அவர்கள் தொடர்பாக போலியான பக்கங்கள் இருந்தால், அதனை முறையாக புகார் செய்ய வேண்டும் என்றும் அத்தம்பதியினர்  வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

-- பெர்னாமா