சிறப்புச் செய்தி

நோன்பு பெருநாளில் வீட்டிற்கு வருகைத் தருவதை அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் - பி.ப.சங்கம்

19/05/2020 05:43 PM

பினாங்கு, 19 மே (பெர்னாமா) --  கொவிட்-19 நோய்த் தொற்றுகளால், மலேசியா இரண்டாவது அலையாக பாதிக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்ககூடும் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

ஆதலால், இவ்வாண்டு நோன்பு பெருநாள் கொண்டாடும் முஸ்லிம் அன்பர்கள், சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நோன்பு பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்கள், அவர்களின் வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும் என்று  அச்சங்கத்தின் தலைவர் முகைடீன் அப்துல் காதர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா மற்றும் பிற வல்லுனர்கள், இந்த கோவிட்-19-தின் புதிய அபாயத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க தவறினால், அதன் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 

கொவிட்-19 அறிகுறி கொண்ட நோயாளிகள், அதே வைரஸ் சுமையை சுமக்கிறார்கள். அதாவது, அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கு, அறிகுறி உள்ளவர்களுக்கு நோய் பரவுவதற்கான அதே வாய்ப்பு உள்ளது. 

மேலும், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிலும், அவர்களில் 50% பேர் தங்களுக்கு நோய் இருந்ததாக அறிகுறி தெரியவில்லை என்றே தெரிவித்திருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு நோன்பு கொண்டாடுபவர்களைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க அரசாங்கம் அனுமதிக்க கூடாது என்றும் அச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் 20 பேர் ஒரே வீட்டில் அமர்ந்து நோன்பு பெருநாளைக் கொண்டாடவும், அதற்கு சொந்தமாக சுயக் கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வதை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். 

''பாலேக் கம்போங்''கிற்கு மட்டும் தடை விதித்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வீட்டுக்கு யாரும் செல்லவோ, வருகை தரவோ கூடாது என்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

நோன்பு பெருநாளை வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் மட்டுமே கொண்டாட அனுமதி தர வேண்டும்.

பண்டிகை காலங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம் என பி.ப.சங்கம் கருதுகிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அப்பால் நாம் மகிழ்ச்சியுடனும் மற்றும் ஆர்வத்துடன் சுதந்திரமாக எல்லா பண்டிகையை கொண்டாடலாம். 

ஆகவே, கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு நோன்பு பெருநாளுக்கு வீட்டிற்கு வருகை தருவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக முகைடீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
 

-- பெர்னாமா