பொது

தகுதிப் பெற்ற அனைத்து சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 210 கோடி ரிங்கிட் மதிப்பிலான பரிவுமிக்கச் சிறப்புக் கடன் திட்டம்

06/04/2020 07:54 PM

புத்ராஜெயா, 06 ஏப்ரல் [பெர்னாமா] -- தகுதிப் பெற்ற அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 210 கோடி ரிங்கிட் மதிப்பிலான பரிவுமிக்கச் சிறப்புக் கடன் திட்டத்தை, அரசாங்கம் உருவாக்கி இருப்பதாக டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கின்றார்.

நாடு முழுவதிலும் உள்ள, சுமார் 7 லட்சம் சிறிய அளவிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தலா மூவாயிரம் ரிங்கிட் மதிப்பிலான, சிறப்புக் கடன் உதவியைப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த உதவியைப் பெற, சிறிய அளவிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கின்றார்.

தகுதிப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலை, அரசாங்கம், ஊராட்சி மன்ற மற்றும் மலேசிய நிறுவன ஆணையத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதனிடையே, உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் பதிவில் இடம் பெற்றிருக்காத, தேசிய பரிவுமிக்க உதவித் தொகையைப் பெற தகுதிப் பெற்ற மக்கள், அதற்குப் புதிய விண்ணப்பத்தைச் செய்யலாம் என்று பிரதமர் குறிப்பிட்டிருக்கின்றார்.

சம்பந்தப் பட்டவர்கள், வருமான வரி வாரியத்தின் அகப் பக்கமான, www.hasil.gov.my மூலம் விண்ணப்பத்தைச் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்ட பிபிஎன்-னில், 563 கோடி ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவி மூலம், சுமார் 83 லட்சம் குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத தனிநபர்கள் பயனடைவார்கள்.

-- பெர்னாமா